Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டம் மூலம் 64 தொழில் முனைவோருக்கு மானியம் ரூ.8.32 கோடி வழங்கப்பட்டுள்ளது

கரூர் : கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் மானியம் பெற்று இயங்கி வரும் தொழில் நிறுவனத்தினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையின் சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.5,833 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் நோக்கம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கவும், அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே ஆகும்.

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற புதிய திட்டத்தினை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் மானியம் வழங்கப்படும்.

மானியம் மொத்த திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் ஆகும். மானிய உச்ச வரம்பு உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 கோடி, சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.75 லட்சம், வணிகம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் (10 ஆண்டுகளுக்கு மிகாமல்) 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில்முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த எந்த தனி நபரும் மற்றும் பங்குதாரர், கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வி தகுதி ஏதுமில்லை. வயது வரம்பு 18 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 64 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 8.32 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க இருப்பவர்கள் தாந்தோணிமலை மாவட்ட தொழில் மையத்தை நேரில் பார்வையிட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வின்போது மாவட்ட மேலாளர் ரமேஷ், உதவி பொறியாளர் மனோஜ், தொழில் நிறுவன உரிமையாளர் பிரபு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.