சட்டமேதை அம்பேத்கருக்கு அஞ்சலி; அரசியலமைப்பு சாசனத்தை காப்பதே கடமை: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் சூளுரை
புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ‘மகாபரிநிர்வாண் திவாஸ்’ என்று அழைக்கப்படும் இந்நாளில், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அம்பேத்கரின் கொள்கைகளைத் தேசிய அளவில் கொண்டு செல்லும் நோக்கில், கடந்த 1992ம் ஆண்டு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அம்பேத்கர் நாட்டின் வழிகாட்டி; அவர் நமக்கு அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கினார். ஆனால், இன்று ஒவ்வொரு இந்தியரின் அரசியலமைப்புச் சட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவரது கொள்கைகளையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பது குடிமக்களாகிய நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து தனது எக்ஸ் தளப் பதிவில், ‘அம்பேத்கரின் சமத்துவம் மற்றும் நீதிக்கான மரபு, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான நமது போராட்டத்திற்கு வலு சேர்க்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


