லாகூர்: அல்-கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் நெருங்கிய உதவியாளரான முகமது அமீன் உல் ஹக் என்பவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அல்-கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு மிக நெருக்கமானவராக இருந்த டாக்டர். முகமது முகமது அமீன் உல் ஹக், அவரது படைத்தலைவராகவும் விளங்கினார். பின்லேடன் கொல்லப்பட்ட பின் தலைமறைவான அமீன் உல் ஹக்கை சர்வதேச தீவிரவாதியாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்தது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன், தலைமறைவாக இருந்த முகமது அமீன் உல் ஹக், ஆப்கானில் தன் சொந்த ஊரான நங்கர்ஹர் மாகாணத்துக்கு கடந்த 2021ம் ஆண்டு திரும்பி விட்டதாக கூறப்பட்டது. இதனிடையே, பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் பல இடங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற அமீன் உல் ஹக் திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரத் பகுதியில் பதுங்கியிருந்த டாக்டர். முகமது அமீன் உல் ஹக்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.