Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுவை தொகுதி பாஜவுக்கு ஒதுக்கீடு என்ஆர் காங். நிர்வாகிகள் செமகடுப்பு: அதிருப்தியாளர்களிடம் கெஞ்சி கூத்தாடும் பாஜ தலைவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே நியமன எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர் பதவி நிரப்பும் விவகாரத்தில் பாஜ நெருக்கடி கொடுத்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் அக்கட்சியே போட்டியிட முன்வந்துள்ளதால் நிர்வாகிகளிடையே செமகடுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தோல்வி பயத்தில் பாஜவினர் குய்யோ..முய்யோ..எனக்கத்தி அதிருப்தியாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வருகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேஜ கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. ஐ.மு. கூட்டணியில் (மதச்சார்பற்ற அணி) காங்கிரஸ் அல்லது திமுகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே புதுச்சேரி தொகுதியை பாஜவுக்கு முதல்வர் ரங்கசாமி விட்டுக் கொடுத்தது அவரது கட்சியினரிடையே செமகடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் தான் களம் இறங்கியது. கடந்த முறை காங்கிரசிடம் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்த முறை ஆளுங்கட்சியாக இருப்பதால் எப்படியாக வெற்றி பெற்றுவிடலாம் என என்ஆர் காங் கட்சியினர் ஆர்வமாக இருந்தனர். சீட்டை எதிர்பார்த்து காத்திருந்த என்ஆர் காங். மூத்த நிர்வாகிகளுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கனவே 3 நியமன எம்எல்ஏக்கள் பதவியை ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடு பாஜவினரே நிரப்பிக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகளை நிரப்ப விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு பாஜக கடும் நெருக்கடியை கொடுத்து வந்ததால் கட்சிக்காரர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். தற்போது எம்பி சீட்டையும் பறித்துக்கொண்டதால் அவர்கள் செமகடுப்பில் உள்ளனர்.

மேலும், பாஜக நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவது தங்களது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என்றே என்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். டெல்லி மேலிடம் கொடுத்த பிரஷரால் தான் ரங்கசாமி வேறு வழியில்லாமல் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியை பாஜவுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் என்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டனர். என்ஆர் காங்கிரசில் உள்ள அதிருப்தியின் தாக்கம் நாடாளுன்ற தேர்தலில் எதிரொலிக்கும் பட்சத்தில் அது பாஜவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதால் குய்யோ..முய்யோ.. எனக் கத்திக்கொண்டு அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் பாஜவும் ஈடுபட்டு வருகிறது. அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என கெஞ்சி கூத்தாடி வருகின்றனர்.