சென்னை: தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்கள் ஒன்றிய அரசு மூலம் நிரப்பப்படுகிறது. அதே போன்று, மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய பல்கலைக்கழகங்கள், அனைத்து எய்ம்ஸ் மற்றும் ஜிம்பர் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் ஆகியவற்றுக்கும் ஒன்றிய அரசு மருத்துவ ஆலோசனை குழு (எம்சிசி) ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் இடங்களை நிரப்பி வருகிறது. இளநிலை நீட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் இக்கலந்தாய்வு நடக்கிறது.
அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான கலந்தாய்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று (ஜூலை 21) முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 28 வரை முதல் சுற்று பதிவு செய்து சாய்ஸ் பில்லிங் செய்யலாம். தொடர்ந்து, ஜூலை 29 மற்றும் 30 நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு ஜூலை 31 முடிவுகள் வெளியிடப்படும். தொடர்ந்து கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் 6 சேர வேண்டும். இதை தொடர்ந்து 2ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 12 முதல் 21ம் தேதி வரையிலும், 3ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.