திருப்புவனம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை அதிமுக, பாஜ கட்சிகள் இணைந்து எதிர்கொள்கின்றன. தேர்தலில் வெற்றிபெற்றால் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கூறி வருகின்றனர். இதற்கு நேர்மாறாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட பாஜ முக்கிய நிர்வாகிகள், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என கூறி வருகின்றனர்.
கூட்டணி ஆட்சி என்ற கருத்தை அமமுக டிடிவி.தினகரனும் வலியுறுத்தி பேசி வருகிறார். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிமாறன் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், ‘‘பேசுவோர் பேசட்டும். அதிமுக தலைமையில் எத்தனை கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் கூட்டணியே தவிர, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும். எடப்பாடிதான் முதல்வர்’’ என குறிப்பிட்டுள்ளார்.