திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா பாதித்து 2 பேர் பலியானதை தொடர்ந்து 6 மாவட்டங்களில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகவேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். கேரளாவில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இந்த நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த மலப்புரத்தை சேர்ந்த பள்ளி மாணவி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலியானார். தொடர்ந்து நேற்று பாலக்காடை சேர்ந்த 58 வயதானவர் பலியானார்.
அதேபோல் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் நோய் அறிகுறிகளுடன் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பலியானவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 500க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கேரளாவில் நிபா பாதித்து 2 பேர் பலியானதை தொடர்ந்து கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு, கண்ணூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டுள்ளனர். நிபா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவையில்லாமல் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.