மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொல்ல முயற்சி மனைவி, தாய், தம்பி மீது வாலிபர் துப்பாக்கிச்சூடு: மூவரும் மருத்துவமனையில் அனுமதி
விக்கிரவாண்டி: மது குடித்ததை தட்டிக்கேட்ட மனைவி, தம்பி மற்றும் தாயை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65). இவரது மனைவி பச்சையம்மாள்(60). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் தென்னரசுவுடன் (34) வசித்து வருகிறார். கடந்த மாதம் விக்கிரவாண்டி அடுத்த தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யாவை தென்னரசு திருமணம் செய்தார். தென்னரசுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இதில் இருந்து மீண்டுவர சில மாதங்களாக தென்னரசு மாத்திரை சாப்பிட்டு வந்தது தெரியவே, கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தென்னரசு குடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதை லாவண்யா கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தென்னரசு வீட்டில் ஆன்லைனில் வாங்கி வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து லாவண்யாவை சுட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அவரது தாய் பச்சையம்மாள் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த தென்னரசுவின் சித்தப்பா மகனும், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி 2ம் ஆண்டு மாணவருமான கார்த்திக் (28) ஆகியோர் ஓடிவந்து தென்னரசை தடுத்துள்ளனர். இதனால், அவர்களையும் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போதையில் இருந்த தென்னரசை சுற்றிவளைத்து பிடித்து மரத்தில் கட்டி வைத்து, தர்மஅடி கொடுத்தனர். தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீசார் வந்து தென்னரசை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.2.65 லட்சம் மதிப்பிலான 3 ஏர்கன் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில், கார்த்திக்கிற்கு மூளையில் 2 குண்டும், லாவண்யாவுக்கு தலையில் குண்டு பாய்ந்திருந்தது. இதையடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாய் பச்சையம்மாளுக்கு நெற்றி பொட்டு, இடது காதில் குண்டடிப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.