மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு; அஜித்குமார் தாய், சித்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை: சிசிடிவி பதிவுகளும் ஆய்வு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் மடப்புரம் அறநிலையத்துறை அலுவலக கோசாலை, அரசினர் மாணவர்கள் விடுதி, புளியந்தோப்பு, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி உள்ளிட்ட பகுதிகளில் சாட்சிகளாக உள்ள அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சார்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில், அஜித்குமார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தேதிகளில் பதிவான காட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 11 நாட்களாக சிபிஐ சார்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று சிபிஐ அதிகாரிகள் இரு குழுவினராக பிரிந்து மடப்புரத்தில் விசாரணை நடத்தினர். மடப்புரம் விலக்கு ஆர்ச் பகுதியில் போலீசார் சார்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அங்குள்ள காஸ் நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு கருவியை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மற்றொரு குழுவினர் மடப்புரம் கோயில் எதிரே அமைந்துள்ள அறநிலையத்துறை பக்தர்கள் தங்கும் விடுதியில் சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அஜித்குமாரின் தாய் மாலதி, சித்தி ரம்யா இருவரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ரம்யா மடப்புரம் கோயில் பகுதியில் தேங்காய் பழக்கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.