Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

6 வது நாளாக விமான சேவை பாதிப்பு 10ம் தேதிக்குள் இயல்பு நிலை திரும்பும்: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

மும்பை: புதிய பணி நேர விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடந்த 6 நாட்களாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். விமானங்களை இயக்கும் செயல்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

2300 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் இண்டிகோ 1650 விமானங்களை நேற்று இயக்கியது. மொத்தம் 650 விமானங்களை மட்டுமே நிறுவனம் ரத்து செய்து இருந்தது. டிசம்பர் 10-15ம் தேதி வரை விமான சேவையின் நிலையான தன்மைக்கு கெடு விதிக்கப்பட்டு இருந்த நிலையில் 10ம் தேதிக்குள் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.

இதனிடையே இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மற்றும் சிஓஓ போர்குவெராஸ் ஆகியோருக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விமான சேவைகள் பாதிப்பு , இடையூறுகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன், நெருக்கடி மேலாண்மை குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு நிலைமையை கண்காணித்து வருகின்றது. இயல்பான செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.  இது குறித்து இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள வீடியோ செய்தியில், இடையூறுகளுக்கு இடையே நாம் படிப்படியாக மீண்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

* நாடாளுமன்ற குழு சம்மன்

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு விமான சேவைகளில் இடையூறு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து விமான நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள் , சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் இருந்து விளக்கம் கோருவதற்கு வாய்ப்புள்ளது.

* ரூ.610 கோடி கட்டணம் பயணிகளுக்கு வாபஸ்

ஒன்றிய விமான போக்குவரத்து துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘விமானங்கள் ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் இதுவரை ரூ.610 கோடி பணத்தை திருப்பி செலுத்தியுள்ளது. ஆங்காங்கே கிடந்த பயணிகளின் 3 ஆயிரம் உடைமைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.