விமான விபத்து செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு விதிகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி!!
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், விமான விபத்து செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது. கோவையை சேர்ந்த பிரவீன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்திற்கு காரணம் அந்த விமானத்தின் விமானிதான் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வந்தன. அந்த விமானத்தை ஓட்டிய விமானியும்தான் விபத்தில் பலியானார். அவர்தான் தவறு செய்தார் என்று ஊடகங்களுக்கு எப்படி தெரியும்.
உரிய விசாரணை எதுவும் செய்யாமல் செய்திகளை வெளியிட்டு விமானியின் குடும்பத்தினர் மீது களங்கத்தை ஏற்படுத்தி அவர்களை உள்ள அளவில் காயப்படுத்துகின்றனர். இதேபோல் பல விமான விபத்துகளிலும் இதேபோல் உண்மையை ஆராயாமல் செய்திகள் வெளிவந்துள்ளது.எனவே, இதுபோன்ற விமான விபத்துகள் தொடர்பான உண்மையை ஆய்வு செய்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி ஒன்றிய விமானத்துறை செயலருக்கு கடந்த 14ம் தேதி மனு அனுப்பினேன். எனவே, எனது மனுவை பரிசீலித்து விமான விபத்து தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவது குறித்த வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி எம்.என்.ஶ்ரீவத்ஸ்வா மற்றும் சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.