Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

சென்னை: சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போன விமானப்படை அதிகாரி 33 ஆண்டு ஓய்வூதியத்துடன் 92 வயது தாயுடன் இணைத்து வைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 92 வயதான பாப்பம்மாள் என்பவரின் மகன் விநாயகம் விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் விமானப்படையில் இருந்து விநாயகத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இதையடுத்து 1984ம் ஆண்டு முதல் ஓய்வூதியத்தை வைத்து வயதான பாப்பம்மாள், மகன் விநாயகத்தை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் அடிக்கடி காணாமல் போனதால் வயதான தாயினால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. மேலும் விநாயகம் தனது ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் அதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். பாப்பம்மாள் மிகவும் வயதான காரணத்தினாலும், விநாயகம் மனநிலை பாதிக்கப்பட்டதாலும் உரிய சான்றிதழ்கள் அளிக்கப்படாததால் 1991ம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட விமானப்படை அதிகாரியான விநாயகம் வழக்கம்போல் காணாமல் போனதால் அவரை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது . மேலும் ஓய்வூதியம் கிடைக்காததால் வயதான காலத்தில் உணவுக்கு கஷ்டப்பட்டு ஆதரவின்றி பாப்பம்மாள் இருந்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியின் நிலைமையை அறிந்து விமானப்படை ஊழியர்கள் சங்கத்தின் மூலம் உதவியை நாடியுள்ளனர்.

குறிப்பாக ஆவடியில் சென்னை காவல் துறை ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர், பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, வயதான பாப்பம்மாளின் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து சென்னை காவல் துறையும், பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் துறையும் விமானப்படை ஊழியர்கள் சங்கமும் இணைந்து, விமானப்படையில் உழைத்த விநாயகத்திற்கு உதவும் வகையில் அனைத்து ஆவணங்களையும் திரட்டி ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டன.

இதற்கிடையே காணாமல் போன விநாயகம் திருத்தணி கோயில் வாசலில் யாசகம் கேட்டு அமர்ந்திருப்பதை உறவினர்கள் கண்டனர் பின்னர் அவரை மீட்டு, தாய் பாப்பம்மாளுடன் இணைத்து வைத்தனர். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை அலுவலகத்தில் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளார் ஜெயசீலன் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி விநாயகத்திற்கு மீண்டும் ஓய்வூதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.

அது மட்டும் அல்லாது 33 வருடமாக கிடைக்காத ஓய்வூதியத்தின் நிலுவையையும் பெற்றுத் தந்துள்ளார். இதற்கான காசோலையில் நேற்று பாப்பம்மாளும், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான விநாயகமும் சேர்ந்து பெற்றுக் கொண்டனர். நிலுவைத் தொகையில் முதல் பகுதியான 11 லட்சம் ரூபாயும் இனி மாதா மாதம் ஓய்வூதியம் சுமார் 38 ஆயிரம் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டதாக பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.