திருச்சி: திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சுரேஷ்குப்தா (62). இவர், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் மீது கலெக்டர் பிரதீப் குமாரிடம் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த நான் அதிமுகவில் மாநகர மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். கடந்த 1985ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வருகிறேன்.
என்னை மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் மாநகர மாவட்ட அலுவலகத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தார். சீனிவாசனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். எனவே அவர் மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். கலெக்டர் உத்தரவின்பேரில், மாநகர போலீசார் விசாரணை நடத்தி சீனிவாசன் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.