Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டோம் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை இனி கட்சியில் சேர்க்க மாட்டோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டோம். இனி எக்காரணத்தை கொண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இப்போதைய நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்பது நேரத்தை வீணாக்குவது, சக்தியை வீணாக்குவது, பணத்தை வீணாக்குவது, எரிபொருளை வீணாக்குவது ஆகும். காலாகாலமாக இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட தொண்டர்களின் கை, எந்த காலத்திலும் மாற்றி ஓட்டுப்போடாது. கட்சி எடுக்கும் முடிவை அவர்கள் புரிந்துகொண்டார்கள். கன்டோன்மென்ட் தேர்தலில் வாக்குச்சாவடிகளை நாங்கள் (அதிமுக) கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

அதற்கு ராணுவ அதிகாரி தான் தலைவராக இருப்பார். அந்த தேர்தலுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தவறு நடந்திருந்தால் அவர்களே நடவடிக்கை எடுத்து இருப்பார்களே. அதிமுக தேர்தலை சந்திக்க என்றைக்குமே பயந்தது இல்லை. தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமாக தேர்தலை நடத்துவோம் என்று உறுதிகொடுக்க முடியுமா, முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அண்ணாமலை எவ்வளவுதான் பேசினாலும், அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது. 10 பேரை சேர்த்துக் கொண்டு தேர்தலில் நின்றால் அது ஒரு வெற்றியா, நீங்கள் தனியாக நின்றிருக்க வேண்டும்.

அதற்கு தயாரா? நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இவ்வளவு வாக்கு சதவீதம் எடுத்திருக்கிறோம் என்று அண்ணாமலை சொல்லி இருக்க வேண்டும். பாஜ கூட்டணியில் பாமக, ஐஜேகே, ஏ.சி.சண்முகம், ஓபிஎஸ், டிடிவி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட அத்தனை பேரையும் சேர்த்துக் கொண்டு 10 சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்கி விட்டோம் என்று சொல்வது சரியான வாதம் கிடையாது. தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜ ஓட்டு சதவீதம் ஏறவே ஏறாது. தேர்தலை புறக்கணித்துவிட்டதால் அதிமுக தொண்டர்கள் யாரும் பாமகவுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி. அவரை அதிமுகவில் இணைப்பது என்பது நடக்காத விஷயம். பொதுக்குழுவில் எடுத்த முடிவு இறுதியான முடிவு. அதேபோன்று சசிகலா மற்றும் சசிகலா சார்ந்த குடும்பத்துக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. போயஸ் கார்டனில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு விட்டார்கள். மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சேர்க்கப்பட்டனர். 2021 தேர்தலுக்கு முன் தேர்தலில் இருந்து ஒதுங்கி கொண்டதாக கூறினார்கள். அவர்கள் அதிமுகவில் உறுப்பினர்கள் கூட கிடையாது. அதிமுகவில் இருந்து சசிகலாவை வெளியேற்றி விட்டோம், அதன்பிறகு எப்படி அவர்கள் உள்ளே வர முடியும். அவர்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

* பொது மேடையில் அமித்ஷா நடந்து கொண்டது தவறு

ஒரு பொது மேடையில் அமித்ஷா அப்படி நடந்திருக்க கூடாது. தமிழிசையை கண்டிக்க வேண்டும் என்றால் டெல்லியில் உள்ள பாஜ அலுவலகத்துக்கு கூப்பிட்டு கண்டித்து இருக்கலாம். ஒரு பொது மேடையில் பெண் என்றும் பாராமல், அமித்ஷா கடினமான வார்த்தையை, என்ன வார்த்தை பயன்படுத்தினார் என்று எனக்கு தெரியாது. நான் பக்கத்தில் இல்லை. ஆனால் அமித்ஷாவின் உடல் அசைவுகளை பார்க்கும்போது கோபத்துடன், கடினமான வார்த்தையை உபயோகப்படுத்தியது நன்றாக தெரிகிறது. உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் ஒரு பெண்ணை மேடையில் வைத்து அவமானப்படுத்தியது தவறு என்றார் ஜெயக்குமார்.