Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக 54வது ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தார் எடப்பாடி

சென்னை: அதிமுக 54வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் நேற்று காலை 9 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அங்கு கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சி, அலுவலகத்தில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பொன்னையன், கோகுலஇந்திரா மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

அதிமுக 54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் அதிமுகவினர் கட்சி கொடியை ஏற்றி வைத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா திருஉருவ படங்களுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினர். இதேபோல் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேற்று சென்னை, அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.