Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக ஆட்சியில் மதுரை சிறையில் ரூ.14 கோடி மோசடி சிறைத்துறை பெண் எஸ்பி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்: 11 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை சப்ளை செய்ததில் ரூ.14 கோடி மோசடி நடந்த விவகாரத்தில் 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சிறைத்துறை பெண் எஸ்பி உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் ஸ்டேஷனரி மற்றும் மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனர்.

இதில், போலி ரசீது தயாரித்து ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டது. அதில், 2017-18, 2018-19 ஆகிய நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்வதற்காக கேட்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை மதுரை மத்திய சிறை நிர்வாகம் தரவில்லை. இதனால், பொருட்களை தயாரிப்பதற்காக ரூ.1.51 கோடி மதிப்பிலான மூல பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிறுவனங்களின் ஜிஎஸ்டி அறிக்கைகளை தணிக்கைத்துறை ஆய்வு செய்தது.

இதில், அந்நிறுவனங்கள் மூலம் சிறைத்துறைக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டில் உள்ள 3 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்கள், அரசின் வெவ்வேறு துறைகளுக்கு அனுப்பப்படாமல் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும் புள்ளியியல் துறை தரவுகளின்படி, அந்த பொருட்களின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.14.35 கோடி என்பதையும் தணிக்கை துறை சுட்டிக்காட்டியது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தணிக்கை துறை பரிந்துரைத்தது. இந்த மோசடி தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மோசடி செய்ததாக மதுரை மத்திய சிறை எஸ்பியாக இருந்த ஊர்மிளா (41), கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன் (39), நிர்வாக அதிகாரி தியாகராஜன் (57) தனியார்துறையை சேர்ந்த வி.எம்.ஜாபர்கான் (74), முகம்மது அன்சாரி (38), முகம்மது அலி (43), சீனிவாசன் (64), சாந்தி, சரவணசுப்பு, தனலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரி ஆகிய 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில், தற்போது புதுக்கோட்டை மத்திய சிறை எஸ்பியாக இருக்கும் ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறை கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.