Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்: எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி; வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தலில் உழைத்த கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவரான பின்பு தான் கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்பட்டது. தமிழிசை, எல்.முருகன் தலைவர்களாக இருந்தபோது பாஜகவுடனான கூட்டணி நன்றாக தான் இருந்தது.

கடந்த காலங்களில் கோவையில் தோல்வியை கண்டிருந்தாலும் அதில் இருந்து மீண்ட இயக்கம் அதிமுக. 2019ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வியை படிப்பினையாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பணியாற்றி 2026ல் வெற்றிபெறுவோம். அண்ணாமலை அதிகமாக பேசி உள்ளார்; தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். கடந்த தேர்தலைவிட அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் அதிகமாக பேசியதாக அண்ணாமலை கூறுகிறார்; ஆனால் பேசியதே அவர் தான். கோயம்புத்தூரில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளைவிட அண்ணாமலை குறைவாகவே பெற்றார். மோடியுடன் நேரடியாக பேசுவேன் என்ற அண்ணாமலை, கோவைக்கு திட்டங்களை கொண்டு வர வேண்டும். நிறைவேற்றிய திட்டங்களை சொல்லி அதிமுக வாக்கு கேட்டது; பாஜக பொய்யை மட்டுமே கூறி வாக்கு கேட்டது. அண்ணா, ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பற்றி குறைகூறி பேசியவர்தான் அண்ணாமலை.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அண்ணாமலை தனது தலைவர் பதவி பறிபோகாமல் பார்த்துக் கொள்ளட்டும். கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும்; விலகி வந்தால் அவ்வளவுதான். அதிமுக தோல்வி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, எங்களது குறிக்கோள் 2026ல் ஆட்சியை பிடிப்பது தான். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும் இவ்வாறு கூறினார்.