Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக ‘0’ ; எடப்பாடி கடும் அதிர்ச்சி: சேலம் நெடுஞ்சாலை நகர் வீடு வெறிச்சோடியது

சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது சேலம் நெடுஞ்சாலை நகர் வீடு வெறிச்சோடியது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நேற்று நடந்து முடிந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டும், வீட்டில் இருந்தும் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் உள்ளார்.

காலையில் சாமி கும்பிட்ட அவர் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தேர்தல் முடிவுகளை பார்த்தார். தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி முன்னிலையில் இருந்த ஒரு சில இடங்களில் மட்டும் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினார். அங்கும் சிறிது நேரத்தில் கட்சி பின்தங்கியதால் கடும் அதிர்ச்சியடைந்தார். ஒன்றிரண்டு இடமாவது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ‘0’ மட்டுமே கிடைத்து தேர்தல் முடிவு அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குறிப்பாக 12 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜ இரண்டாம் இடம் வந்ததை அறிந்து விரக்தியடைந்தார். தேர்தல் முடிவுகள் படுதோல்வியை பரிசாக தந்ததால் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்களின்றி அந்த பகுதியே நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கட்சி நிர்வாகிகள் யாரும் வீட்டுக்கு வரவில்லை. அவரது வீட்டுக்கு முன்பு 4 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பார்க்க வந்த ஒரு சில அதிமுகவினர் கூட, வீட்டிற்குள் செல்லாமல் ஆங்காங்கே நின்றிருந்தனர்.

* தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு; சேலத்தில் போஸ்டரால் பரபரப்பு

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானவுடன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரை கட்சியில் இருந்து நீக்கினார். சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலா நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என வழக்கு நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடத்தி வருகிறார். தனித்தனியாக பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக கூறி வருகிறார்.

இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சேலத்தில் சசிகலா அணியை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே ஒட்டியுள்ள போஸ்டரில், ‘சிந்திப்போம், செயல்படுவோம்... சின்னம்மா தலைமை ஏற்போம்’ என அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சசிகலா அணியினர் கூறுகையில், ‘தனியாக நின்று எடப்பாடியால் வெற்றி பெற முடியாது. ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை காப்பாற்ற பிரிந்து போன அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்’ என்றனர்.

* புதுவை, விளவங்கோட்டில் அதிமுகவை 4வது இடத்துக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அங்கு சீமானின் நாம் தமிழர் கட்சி 3வது இடத்துக்கு முன்னேறியது. அந்த கட்சிக்கு இதுவரை இல்லாத வகையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. இதேபோல, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாதக 3வது இடமும் அதிமுக 4வது இடமும் பெற்றுள்ளது.