Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ் பாதுகாப்பு’ வழங்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடப்படுகிறது. அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிமுக தொண்டர்களுக்கு இருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை பரிசீலனை செய்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முன் வரவேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சராக அமித்ஷா உள்ளார். அவரது பரிந்துரையின் பேரிலேயே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எடப்பாடிக்கு 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் சுழற்சி முறையில் இடம்பெறும் வகையில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. மேலும் சிலருக்கு தமிழகத்தில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த பாஜ அரசு இந்த பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டது. தற்போது, பாஜ கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.