சென்னை: ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி அழைப்பு விடுத்தநிலையில், அவரது அழைப்பை சீமான், விஜய் ஆகியோர் நிராகரித்து விட்டனர்.
அதிமுக பொதுச்செயலாள் எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சி தான் அமையும். சீமான், விஜய் தரப்புடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும்’’ என்று கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த கூட்டணி அழைப்பை சீமான் மற்றும் விஜய் உடனடியாக மறுத்தனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டி என்பதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று கூறுகையில்,‘‘234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் கொள்கை என்பது தனித்து அரசியல்தான். எத்தனை காலம் ஆனாலும் எங்களின் தனித்த அரசியல் மாறாது’’ என்று தெரிவித்தார்.
த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேற்று சேலத்தில் கூறும்போது, "பாஜவை நேரடியாக வரவேற்று கூட்டணி வைத்து அதிமுக வலுவிழந்துவிட்டது. நாங்கள் ஏன் அதிமுகவை எதிர்க்கவில்லை என்றால், அதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்கள் தவெகவில் எப்போதோ இணைந்துவிட்டார்கள். பாஜவை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய். எந்த காலத்திலும் பாஜவுடன் எங்களுக்கு கூட்டணி கிடையாது., உறவு கிடையாது என்பதை அழுத்தமாக உறுதியுடன் கூறுகிறோம்" என்றார்.
இதுகுறித்து நேற்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘எடப்பாடி கடை விரித்தும் யாரும் வரவில்லை. கடை விரித்து யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும்’’ என்று கிண்டலாக கூறினார்.