சென்னை: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ரேண்டம் வாக்ஸ் இணைந்து இதழியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக வருங்கால ஊடகம் குறித்தான கருத்தரங்கை நேற்று நடத்தியது. இதில் தமிழில் பெரிய மொழி மாதிரிகள் (எல்எல்எம்) மற்றும் சவால்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்காலப் பாதை தொடர்பான முதல் கருத்தரங்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பல்வேறு ஏஐ சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவில் நாம் தற்போது ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டிய தேவை உள்ளது. ஊடகத்துறையில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, நிறைய முக்கிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. சினிமா துறையில் அதனை மார்க்கெட் செய்யவும், படைப்புகளை உலகம் முழுவதும் பரவலாக்குவதிலும் அதிக பங்கு வகித்துள்ளது.
மருத்துவத்துறையிலும் ஏஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது நோய்களை கண்டறிந்து, சிறப்பான சிகிச்சை வழங்க உதவுகிறது. ஆனால் மருத்துவர்கள் தான் எப்போதும் சிகிச்சை அளிக்க முடியும். ஏஐயால் அனைத்து துறைகளிலும் தனித்துவமான வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. இந்த தொழில்நுட்பங்களை அரசுகளால் மட்டுமே வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. பெரு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் பங்கேற்பு மிக அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.


