Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம்; கலப்பட எரிபொருளை பயன்படுத்தி இருக்கலாம்! சென்னையை சேர்ந்த நிபுணர் பகீர் தகவல்

சென்னை: அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம், கலப்பட எரிபொருளை பயன்படுத்தி இருக்கலாம் என்று சென்னையை சேர்ந்த நிபுணர் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். அகமதாபாத் விமான விபத்து குறித்து தேசிய விண்வெளி ஆய்வகத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஜே.முரளிதர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு சென்னையில் அளித்த பேட்டியில், ‘அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட்ட ஏஐ-171 போயிங் ட்ரீம்லைனர் 787-8 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தின் எல்லைக்கு வெளியே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே’ என அபாய அழைப்பு விடுத்துள்ளது. அதன் பிறகு விமானத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அகமதாபாத் விமான விபத்து பல கேள்விகளை எழுப்பி உள்ளது. எரிபொருள் கலப்படம் போன்ற காரணங்களால் இதுபோன்ற கோர சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பொதுவாக, விமான விபத்துகளின் காரணத்தைக் கண்டறிய, விமானத்தின் கருப்புப் பெட்டியான விமான தரவு ரெக்கார்டர்மற்றும் விமானிகளின் உரையாடலைப் பதிவு செய்யும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்வது முதல் படியாகும். பறவை மோதுவதால் விமானத்தின் இரண்டு இன்ஜின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்க வாய்ப்பில்லை.

அவ்வாறு நடந்திருந்தால் ஒரு இன்ஜின் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும். எனவே விமானத்தின் இரண்டு இன்ஜின்களும் ஒரே நேரத்தில் சக்தியை இழந்ததற்கு எரிபொருள் கலப்படம் முக்கிய காரணமாக இருக்கலாம். அவ்வாறு எரிபொருள் பாதிக்கப்பட்டால், விமானத்தால் போதிய உயரத்திற்குச் செல்ல முடியாது. இந்த விமானம் லண்டன் செல்வதற்காக 35 டன்னுக்கும் அதிகமான எரிபொருளைக் கொண்டிருந்தது. இதனால், விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதும் மிகப்பெரிய தீக்கோளமாக வெடித்துச் சிதறியது. இதனால் இவ்வளவு பெரிய விபத்தை சந்திக்க நேரிட்டது’ என்றார்.