Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகமதாபாத் விமான விபத்து எல்லாம் விதி வசம்: அமித்ஷா சர்ச்சை கருத்து காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி: விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் எரிந்ததால் வெப்பநிலை அதிகமாக இருந்ததால் யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை. விமானத்திற்குள் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது. அது தீப்பிடித்ததால் யாரையும் காப்பாற்றுவது சாத்தியமில்லாமல் போய் விட்டது. விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது. எல்லாம் விதி வசம்’ என்று கூறினார்.

அவரது பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து காங்கிரசின் ஊடக பிரிவின் தலைவர் பவன் கேரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி மக்கள் இறக்கும் போது ஒரு உள்துறை அமைச்சர் அதற்கு பொறுப்பேற்கும் வகையில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என கூறி அந்த விபத்துக்கு பொறுப்பேற்பதில் இருந்து விலகி நிற்கும் வகையில் பேசக்கூடாது. விபத்துக்களை தடுக்க முடியாவிட்டால் நமக்கு ஏன் இத்தனை அமைச்சகங்கள் இருக்கின்றன. விமான விபத்துக்கள் கடவுளின் செயல்கள் அல்ல. அவை தடுக்கக்கூடியவை.

அதற்காக விமான ஒழுங்குமுறை அமைப்புகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அவசர செயல்பாட்டு அமைப்புகள் போன்றவை உள்ளன. உள்துறை அமைச்சரின் வாதத்தின்படி பார்த்தால் பாதுகாப்பு உள்கட்டமைப்பு, ஒழுங்குமுறை அமைப்பு,பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அவசர செயல்பாட்டு அமைப்புகள் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விட வேண்டுமா? எல்லாம் விதி என சொல்லி விட்டு போய் விட வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிடுகையில், ‘உள்துறை அமைச்சராக உள்ளவர் இப்படிதான் பேசுவதா? அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு உணர்வுபூர்வமற்றது’ என குறிப்பிட்டுள்ளார்.

* காங்கிரஸ் அரசியல் செய்கிறது: பா.ஜ

அமித்ஷா கருத்து குறித்து கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,’ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மரணத்திற்கு நாடு துக்கம் அனுசரிக்கும் போது, ​​காங்கிரஸ் அரசியல் செய்கிறது. அமித் ஷாவின் 7 நிமிடம் 11 வினாடி வீடியோவில், போலிச் செய்திகளைப் பரப்புவதற்காக காங்கிரஸ் 11 வினாடி கிளிப் செய்யப்பட்ட வீடியோவை வெளியிடுகிறது. ஒற்றுமையை விட அரசியல் முன்னுரிமை பெறுவது வெட்கக்கேடானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.