Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உலகத்தையே உறைய வைத்த அகமதாபாத் விமான விபத்து.. கற்பனை செய்ய முடியாத துயரம்: பிரதமர் மோடி வேதனை..!!

டெல்லி: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்க துவங்கிய 30 வினாடிகளில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமான பயணிகள் உட்பட 241 பேர் பலியாகினர். 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 37 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 44 பேர் படுகாயமடைந்தனர்.

விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விபத்தில் பலியாகி உள்ளார். உலகையே உலுக்கி உள்ள இந்த கோர விபத்தில் ஒரே ஒரு பயணியான விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று குஜராத்தின் அகமதாபாத்திற்கு சென்றார். அகமதாபாத் விமான நிலையத்தில் பார்வையிட்ட பிரதமர் மோடி அதிகாரிகளுடன் பேசினார்.

விமான சேவைகள் வழக்கம் போல் செயல்படுவதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர். பின்னர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் விமான விபத்தில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் சந்தித்தார். தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபரை மருத்துவமனைக்கு சென்று பார்த்த பிரதமர் மோடி அவரிடம் நலம் விசாரித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமர் மோடி இது கற்பனை செய்ய முடியாத துயரம் என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நாம் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். திடீரென, இதயம் உடையும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் அந்த வெற்றிடம் வரும் பல ஆண்டுகளுக்கும் உணரப்படும் என்பதையும் அறிவோம். ஓம் சாந்தி.

இன்று அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது. அயராது மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மற்றும் குழுக்களைச் சந்தித்தோம். கற்பனை செய்ய முடியாத இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.