Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாண்மை இணை இயக்குநர்களின் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது..!!

சென்னை: வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், இன்று வேளாண்மை இயக்குநரகத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சரின் ஆய்வுரையில், வேளாண்மை இணை இயக்குநர்கள் கிராம அளவில் பயிர் சாகுபடித்திட்டம் தயாரித்து, அதற்குத் தேவைப்படும் இடுபொருட்களை விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை அவ்வப்போது களப்பணியாளர்கள் பார்வையிட்டு, தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.

மேலும், பயிர்களில் காணப்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்குரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்கள். உணவு தானிய உற்பத்தியினை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாகுபடி மற்றும் உற்பத்தி இலக்குகளை முழுமையாக சாதனை அடைந்திட வேண்டும். பயிர் வாரியான உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கடைபிடிக்கச் செய்திட வேண்டும். ஒரு கிராமம்-ஒரு பயிர் திட்டத்தின் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்களை செய்து காண்பித்திட வேண்டும் எனக் கூறினார்கள்.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப. தனது உரையில், உயிர்ம சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இதற்காக கிராம அளவில் செயல் விளக்கங்கள் அமைப்பதை உறுதி செய்திட வேண்டும். முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், பசுந்தாளுர விதைகளை உரிய காலத்தில் விநியோகித்து, விதைப்பு செய்வதை கண்காணித்திட வேண்டும்.

பயறு வகைப் பயிர்களான துவரை, உளுந்து ஆகியவற்றின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்து, பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்கள். இந்த ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., மற்றும் வேளாண்மை இயக்குநரக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.