Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு விவசாயிகள், விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு!!

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள், விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில விவரங்கள் இணைய வழியில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த கள அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொது இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் 10890 விவசாயிகளில் இதுவரை 5600 விவசாயிகளின் நில விவரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டள்ளது. இதேபோல் திருவாரூர்

மாவட்டத்தில் 85ஆயிரம் விவசாயிகளில் இதுவரை 55ஆயிரம் விவசாயிகளே அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்களின் நில விவரங்களை இணைய வழியில் கட்டணமின்றி பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு தங்களின் விவசாய நில பட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை தங்கள் வருவாய் கிராமத்தில் பதிவு செய்து கொண்டிருக்கும் களப் பணியாளர்களிடம் கொண்டு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

இந்நிலையில், நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் பெரும்பாலான விவசாயிகள் அடையாள எண் பெற விண்ணப்பிக்கவில்லை. வேளாண் துறை சார்ந்த திட்டங்களின் பயன்களை பெற விவசாய அடையாள எண்ணைப் பெறுவது அவசியம் ஆகும். எனவே தமிழ்நாடு விவசாயிகள், விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பிற துறைகளால் செயல்படுத்தப்படும் அனைத்து ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள், பிரதமரின் கவுரவ ஊக்கத் தொகை, பயிர் காப்பீட்டுத் தொகை, பயிர் கடன், வெள்ள நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் போன்ற திட்டங்கள் இந்த பதிவுகளின் அடிப்படையிலேயே இனிவரும் காலங்களில் வழங்கப்படும் என்பதால், இந்த கெடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.