Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னைவாசிகளை வாட்டி எடுக்கும் வெயில்

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எதிரொலியாக சென்னையில் நேற்று கடற்கரை, பூங்காக்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரலில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெயிலின் தாக்கத்தால் மக்கள் காலை 11 மணிக்கு மேல் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க தொடங்கினர். வீடுகளிலேயே முடங்கிய காட்சியை காண முடிந்தது. வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்திரி வெயில் வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. கத்திரி வெயில் தொடங்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு 5 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அறிகுறியாக சென்னையை பொறுத்தவரை நேற்று காலை முதல் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. 11 மணிக்கு மேல் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பிற்பகல் வேளையில் சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது.

அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வேறு. அனைவரும் வீட்டில் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியும், வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இயற்கை காற்றை சுவாசிக்கவும் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதியை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால், மாலை 4 மணி முதல் கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக கடற்கரை பகுதிகள் காட்சியளித்தன.

குடும்பத்துடன் வந்து கடற்கரை பகுதியில் மக்கள் பொழுதை போக்கினர். இதேபோல சென்னையில் உள்ள சிறிய பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சிறுவர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அங்கேயே வீட்டில் இருந்து சமைத்து கொண்டுவரப்பட்ட உணவுகளை குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். அது மட்டுமல்லாமல் பூங்காக்களுக்கு வெளியே சிறு, சிறு கடைகளில் விற்பனை களைக்கட்டியது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலுக்கு இதமான பழங்கள் வரத்தும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சாலையோரங்களில் தர்பூசணி, கிர்ணி பழம், சாத்துக்குடி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி செல்லும் காட்சியை காண முடிந்தது.