சென்னை: ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்று திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆக.26ல் தமிழ்நாடு வருகிறார். கடந்த ஜூலை 26ம் தேதி தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.4800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து ரூ.451 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டதாகவும், இது முந்தைய ஆட்சியை விட 3 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார். இந்த விழா முடிந்த பிறகு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி சென்றார். அடுத்த நாள், அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். ரூ.1,000 மதிப்பிலான, பேரரசர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இதன்பின்பு, திருச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்ற அவர், அதன் பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், ஆக.26ம் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை சிதம்பரம், திருவண்ணாமலையில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து நேரலையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். மேலும், செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.