Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

18 ஆண்டுகளுக்கு பிறகு ... அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை மின்சார டபுள் டக்கர் பேருந்துக்கான சோதனை ஓட்டம்!!

சென்னை : சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை டபுள் டெக்கர் பேருந்துக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னையில் 1970களில் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் என அழைக்கப்படும் பேருந்துகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டன. 10 ஆண்டுகள் இந்த பேருந்துகள் சென்னையில் மக்கள் பயன்பாட்டிற்கான தனது சேவையை வழங்கியது. அதன்பிறகு 1980களில் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பின்னர் 1997ம் ஆண்டில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் சென்னையில் ஓடத் தொடங்கின. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அவை பயணிகளை ஏற்றிச் சென்றன. கடைசியாக உயர் நீதிமன்றம் - தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 2008ம் ஆண்டு இறுதியாக சென்னை மாநகரில் இயக்கப்பட்டு அத்துடன் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு இதுவரை சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்த இரட்டை அடுக்கு கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் கட்டமாக 20 மின்சார டபுள் டக்கர் பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டன. குறிப்பாக, வார இறுதி நாட்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடம், பயணிகளுக்கு தேவையாக உள்ள அதிகம் பயன்படுத்தும் வழித்தடம் உள்ளிட்டவைகளில் இயக்க முடிவெடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை டபுள் டெக்கர் பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிவப்பு நிறம் கொண்ட டபுள் டெக்கர் பேருந்து, அடையாறில் இருந்து, மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. சாதாரண அரசு பேருந்துகளில் 60 பேர் மட்டுமே பயணிக்கும் நிலையில் டபுள் டெக்கர் பேருந்தில் 90 பேர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி மாதம் முதல் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து இயக்கப்படவுள்ள நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.