வழக்குரைஞர்கள் நல நிதியம், கேளிக்கை வரி உள்ளிட்ட 19 சட்டத்திருத்த முன்வடிவு தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
சட்டப் பேரவையில் நேற்று 19 திருத்த சட்ட முன்வடிவுகள் கொண்டு வரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டப் பேரவையின் கூட்டம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்தது. இரண்டாம் நாள் சட்டப் பேரவை கூட்டத்தில், சட்ட முன்வடிவுத் தீர்மானங்கள் பேரவையில் படிக்கப்பட்டன. அவற்றில், சரக்கு மற்றும் சேவை வரி, கனிம வளம், பொதுக் கட்டடங்கள், உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி, தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல், வழக்குரைஞர்கள் நல நிதியம், தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழங்குதல்,
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் காப்பகங்கள், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகம், உள்ளிட்ட திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் கொண்டு வரப்பட்டன. அப்போது, எதிர் கட்சி உறுப்பினர்கள் சில சட்ட முன்வடிவுகளில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து, பேரவையில் 19 சட்ட முன்வடிவுகளை சபாநாயகர் அப்பாவு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார்.


