புதிய நிர்வாகிகள் பட்டியலில் பாகுபாடு வன்னியர் சமுதாயம் புறக்கணிப்பால் வடமாவட்ட பாஜ நிர்வாகிகள் அதிருப்தி: கட்சி தாவியவர்களுக்கு, டொனேசன் கொடுத்தவர்களுக்கு சீட்டா என ஆதங்கம்
விழுப்புரம்: பாஜ புதிய நிர்வாகிகள் பட்டியலில் வன்னியர் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால் வடமாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜவில் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, 51 பேர் கொண்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை தேசிய தலைவர் ஜேபி நட்டா ஒப்புதலுடன் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், நடிகை குஷ்புவுக்கு புதிய பதவி, கே.டி.ராகவனுக்கு மீண்டும் பதவி, ஏற்கனவே இருந்த நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநில துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, வி.பி துரைசாமி, கே.பி ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனக சபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏஜி.சம்பத், பால் கனகராஜ் ஆகியோர் தொடர்வார்கள் என்றும், புதிதாக நடிகை குஷ்பு, முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி, ஜெய்பிரகாஷ், வெங்கடேசன், சுந்தர் உள்ளிட்டவர்களும் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் பாலகணபதி, சீனுவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏபி.முருகானந்தம் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவியில் நீடிப்பார்கள் என்றும், அமர்பிரசாந்த் ரெட்டி, விழுப்புரத்தில் அதிமுகவிலிருந்து சமீபத்தில் இணைந்த ரகுராமன் உள்ளிட்டவர்களுக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி என்று 51 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலில் பாகுபாடும், நீண்டகாலமாக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவும், மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள், டொனேசன் கொடுத்தவர்களுக்கெல்லாம் மாநில பொறுப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் பாஜவில் புகைச்சல் எழுந்திருக்கிறது. குறிப்பாக இந்த பட்டியலில் வன்னியர் சமுதாயம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது வடமாவட்ட பாஜவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் முடிவு வட மாவட்டங்களில் இருப்பதால் பிரதான கட்சிகள் இங்கு முழுமையாக கவனம் செலுத்தி கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தேசிய கட்சியான பாஜவில் வடமாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமாக பார்க்கப்படும் வன்னியர்களுக்கு பதவிகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
* தேர்தலில் மிகப்பெரிய சரிவு ஏற்படும்
பாஜ மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வன்னியர்கள் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடியது. இதனால்தான் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது பாஜகவில் வெளியான பட்டியலில் தேவர், நடார், ரெட்டியார், நாயுடு, கிறிஸ்துவர் போன்ற சமுதாயத்தினருக்கு அதிகளவில் கட்சி பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர் சமுதாயத்தில் நீண்டகாலமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ஏஜிசம்பத்திற்கு மட்டும் மீண்டும் அந்த பதவி கொடுக்கப்பட்டதே தவிர புதிதாக யாருக்கும் வழங்கப்படவில்லை.
இவர் சார்ந்த மாவட்டத்தில் ரெட்டியார் சமுதாயத்திற்கும் மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து சமீபத்தில் பாஜவிற்கு தாவிய முரளி(எ)ரகுராமன் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் வன்னியர் சமுதாயத்தில் பலஆண்டுகளாக உழைத்து கட்சி வளர்த்தவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டதாகவும் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
வட மாவட்டங்களில் சுமார் 60 தொகுதிகள் உள்ளது. ஆனால் வன்னியர்களுக்கு பாஜவில் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காததால் இந்த பகுதிகளில் எப்படி கட்சி பணியாற்றுவது, நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது என்று தெரியவில்லை. கட்சியை வளர்ப்பது கடினமாக இருக்கும். தேர்தலில் மிகப்பெரிய சரிவு ஏற்படும்’ என்றனர்.
* அதிமுகவுக்கு பாதிப்பு
அதிமுகவை பொறுத்தவரை வட மாவட்டங்களில் பாமகவோடு கூட்டணி வைத்து கனிசமான வாக்கு வங்கியை தக்கவைத்திருந்தது. தற்போது பாஜவோடு கூட்டணியில் உள்ளது. அக்கட்சியோ வன்னியர் சமுதாயத்தை முற்றிலும் புறக்கணித்துள்ளதால் இது அதிமுகவிற்கும் வரவுள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.