Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

ஆவடி: ஆவடி அருகே போதையில் தங்கையை ஆபாசமாக திட்டிய ஆத்திரத்தில் மீன்பண்ணை ஊழியரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, ஜெயசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் அலங்கார மீன்கள் வளர்க்கும் பண்ணை நடத்தி வருகிறார். இங்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26) தனியாக குடிசை அமைத்து தங்கி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, உடன் பணிபுரியும் கண்ணபிரான் (18) என்ற வாலிபருடன் மணிகண்டன் மது அருந்தியுள்ளார். அப்போது கண்ணபிரான் உறங்கச் சென்ற நிலையில், மணிகண்டன் வெளியே செல்வதாக கூறிச் சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை, மணிகண்டன் தலை மற்றும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மீன் பண்ணை செல்லும் வழியில் இறந்து கிடந்துள்ளார்.

அதை கண்ட மீன் பண்ணை உரிமையாளர் தங்கராஜ், ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளியை வந்தனர். அப்போது ஆரிக்கம்மேடு ஏரிக்கரையில் பதுங்கி இருந்தபோது கண்ணபிரானை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு, மணிகண்டன் கண்ணபிரானுடன் வழக்கம்போல் மது அருந்தியுள்ளார். அப்போது கண்ணபிரானையும், அவரது குடும்பத்தையும், தகாத வார்த்தையால் திட்டி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணபிரான், மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்த விசாரணையில் போலீசாரிடம் கண்ணபிரான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். எனக்கு தாய் இல்லாததால், மாற்றுத் திறனாளி தந்தை மற்றும் பள்ளியில் படிக்கும் தங்கையுடன் நிலக்கோட்டையில் வசித்து வருகிறேன். என் தங்கைக்காகத்தான் சென்னைக்கு வந்து வேலை செய்கிறேன். மணிகண்டன், தினமும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். மதுபோதையில் என்னையும், என் தங்கையையும் தகாத வார்த்தையில் திட்டுவார். அதை பொறுத்துக்கொண்டு வேலை செய்து வந்தேன். நேற்று முன்தினம் வழக்கம்போல், மது அருந்தியபோது, மணிகண்டன் கத்தியைக் காட்டி மிரட்டினார். பின், எனது மொபைல் போனில் எனது தங்கையை அழைத்து ஆபாசமாக பேசினார். என் தங்கைக்காக வாழ்ந்து வரும் என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், ஆத்திரத்தில் மணிகண்டனை கொலை செய்ததாக கண்ணபிரான் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு பின், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், புதிதாக அமலாகியுள்ள குற்றவியல் சட்டம் 101, 103 (1) பிரிவின் கீழ் கண்ணபிரான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.