Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதானி துறைமுக கன்டெய்னரில் வெள்ளி கட்டி கடத்தல் வழக்கில் 12 பேர் கைது: தனிப்படையினருக்கு வெகுமதி

பொன்னேரி: சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஒரு தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம், கடந்த 4ம் தேதி லண்டனிலிருந்து 2 கன்டெய்னர்களில் 39 டன் வெள்ளிக் கட்டிகளை இறக்குமதி செய்திருந்தது. இந்த வெள்ளிக் கட்டிகள் அனைத்தும் லண்டனில் இருந்து கப்பல் மூலமாக மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்துக்கு வந்தது, பின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் வேர்ஹவுஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 2 கன்டெய்னர்களில் இருந்தும் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான 922 கிலோ எடையில் 30 வெள்ளிக் கட்டிகள் மாயமாகியிருப்பது அந்த தனியார் நிறுவன அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்த 2 கன்டெய்னர்களில் இருந்த ஜிபிஎஸ் கருவிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் தாசரி ஹரி ராவ் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் காவல்நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையரக ஆணையர் கி.சங்கர் உத்தரவின்பேரில், செங்குன்றம் துணை ஆணையர் பாலாஜி மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் பொன்னேரி சங்கர், எண்ணூர் வீரக்குமார், அம்பத்தூர் பிராங்க்ளின் ரூபன் டி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் சிசிடிவி காமிரா பதிவுகள் மற்றும் பலரிடம் விசாரணையை முடுக்கி, வெள்ளிக்கட்டி கடத்தல் தொடர்பான ஆசாமிகளை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன் மீஞ்சூர், கடப்பாக்கத்தைச் சேர்ந்த அதானி துறைமுக ஆபரேட்டர் நவீன்குமார் (25), மன்னார்குடியை சேர்ந்த அதானி துறைமுக லாரி டிரைவர் ஆகாஷ் (24), சென்னை ராயபுரத்தை சேர்ந்த கப்பல் மேற்பார்வையாளர் எபினாஸ் (46), திருவொற்றியூரை சேர்ந்த யார்டு மேற்பார்வையாளர் தேசிங்கு (55), பழவேற்காட்டை சேர்ந்த குணசீலன் (27), எர்ணாவூரை சேர்ந்த சந்தோஷ் (38), மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷ் (39), சென்னையை சேர்ந்த சண்முகவேல், கச்சி முகமது, முத்துராமன், அப்துல் கரீம், முனியாண்டி உள்பட 12 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.9 கோடி மதிப்பிலான வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நேற்று 12 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெள்ளிக் கட்டி கடத்தலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடித்த துணை ஆணையர், 3 உதவி ஆணையர்கள், ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாரை நேற்று மாலை ஆவடி காவல் ஆணையரக ஆணையர் கி.சங்கர் நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதிகள் வழங்கினார்.