Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. தவிர வேறு எந்த நிறுவனமும் முதலீடு செய்ய விரும்பவில்லை: செல்வப்பெருந்தகை

சென்னை: அதானி நிறுவனத்தின் ரூ.5,000 கோடி கடன் பத்திரங்களை எல்.ஐ.சி. நிறுவனம் முழுமையாக வாங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய ஒரு நிறுவனத்திற்கு பொதுத்துறை நிறுவன பணம் வாரி வழங்கப்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை முழுவதுமாக எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கி உள்ளது.

அதானி போர்ட்ஸின் சொத்து மதிப்பில் 88 சதவிகிதம் கடன்களாலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தற்போதைய கடன் சுமை ரூ.36,422 கோடியாக உள்ளது. இதில் ஒரு பகுதியை திருப்பி செலுத்த, அரசு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியிடமிருந்து, கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடியை திரட்டியுள்ளது.

உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை வாங்க எந்த ஒரு முதலீட்டு நிறுவனமோ, நிதி நிறுவனமோ தயாராக இல்லாத நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி நிறுவனம் இந்த கடன் பத்திரங்களை முழுவதுமாக வாங்கியுள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள், ஊழல் புகார்கள், அன்னிய நாட்டில் இருந்து பினாமி முதலீடுகள் வந்ததற்கான புகார்கள், செபி விசாரணை ஆகியவற்றில் சிக்கி, ஹிண்டன்பர்க் அறிக்கையினால் உலக அளவில் அவப்பெயர் மற்றும் நம்பிக்கையிழப்பை பெற்றுள்ள அதானி குழுமத்தில், எல்.ஐ.சி.யைத் தவிர வேறு எந்த நிறுவனமும் முதலீடு செய்ய விரும்பவில்லை.

இந்த முதலீட்டை தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. போன்ற அரசு நிறுவனங்கள் அதானி குழுமத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதை கடுமையாக கண்டித்துள்ளார். அவர், பொதுமக்களின் சேமிப்புகள் ஆபத்துக்குள்ளாக்கப்படுவதாகவும், இந்த முதலீடுகள் அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எல்.ஐ.சி. நிறுவனம் ஒன்றிய அரசுக்கு சொந்தமானது என்பதால், தற்போது மோடி அரசின் ஆணைப்படியே செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு சொந்தமான ‘அதானி போர்ட்ஸ்” நிறுவனத்தின் பங்குகளை வாங்க, ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ஆணையிட்டது யார் ? பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் அதானி போர்ட்ஸ் நிறுவனம் திவாலானால், பின்னர் எல்.ஐ.சி நிறுவனம் அளித்துள்ள ரூ.5,000 கோடி கடனை வசூலிக்க முடியாமல் தள்ளுபடி செய்ய நேரிடும் அபாயம் உருவாகியுள்ளது.

குரோனி கேபிடலிசம் எனப்படும் கூட்டுக் களவாணி முதலாளித்துவத்திற்கு இந்த விவகாரம் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பணத்தை பொறுப்பற்ற முறையில், பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும், சர்ச்சைக்குரிய ஒரு நிறுவனத்திற்கு வாரி வழங்கியுள்ள மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.