சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல்நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார். சென்னையில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனால் அவர் மீது புகார்கள் குவிந்தது. அதன்பேரில் எழும்பூர் மற்றும் மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நடிகை கஸ்தூரியை ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் எழும்பூர் போலீசார் கடந்த 16ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர், ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை கஸ்தூரி கடந்த 21ம் தேதி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். மறு உத்தரவு வரும் வரையில் தினமும் அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி நடிகை கஸ்தூரி நேற்று காலை 10 மணியளவில் தனது வக்கீலுடன் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் பண்ணினேன். தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி’ என்று கூறினார்.