போதைப் பொருள் வழக்கில் நடிகர் காந்த் கைது எதிரொலி நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை: அதிமுக பிரமுகர் பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் காந்த் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக நடிகர் கிருஷ்ணா நேற்று போலீஸ் முன் ஆஜரானார். அதேநேரத்தில், அதிமுக பிரமுகர் பிரசாத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அதிமுக விஐபிக்கள், சினிமா பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் ஒரு குழுவினர் நடத்திய பார்ட்டியில் திடீர் மோதல் ஏற்பட்டது. அதில் முன்னாள் ஏடிஎஸ்பியின் மகனை அவர்கள் தாக்கினர். அவரும் திருப்பித் தாக்கினார். இந்த விவகாரத்தில், போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதுதான் மோதலில் ஈடுபட்ட அதிமுக ஐடி விங்க் பிரமுகர் பிரசாத், அதிமுக விளையாட்டு அணி செயலாளர் அஜய் வாண்டையார், ஓட்டல் உரிமையாளர் இசிஆர் ராஜா, துரைசிங்கம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள், தற்போதைய சில அதிகாரிகள் துணையுடன் தனி அரசாங்கமே நடத்தி வந்துள்ளனர். அவர்கள், கந்து வட்டிக்கு பணம் கொடுப்பது, பணம் கொடுக்காவிட்டால், கார்களை தூக்கிக் கொண்டு வருவது, போதைப் பொருள் விற்பனை செய்வது, தென் மாவட்ட கூலிப்படையினருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுப்பது, அவர்கள் மூலம் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது என்று சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதில், அதிமுக ஐடி விங்க் பிரமுகர் பிரசாத்திடம் விசாரணை நடத்தியதில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் போதைப் பொருள் பயன்படுத்துவதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமாரிடம் இருந்து கொக்கைன் போதைப் பொருள் வாங்கி, விஐபிக்களுக்கு அளிக்கப்படும் பார்ட்டியில் விநியோகம் செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனால் போலீசார் பிரதீப்குமாரை தேடி வந்தனர். அவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி கானா நாட்டைச் சேர்ந்த ஜான் கைது செய்யப்பட்டார். அதில் பிரதீப்குமார், பிரசாத் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் சினிமா விஐபிக்களுக்கு பெரும் அளவில் சப்ளை செய்திருப்பது தெரிந்தது. அதில் குறிப்பாக நடிகர்கள் காந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளனர். அவர்கள், அதை தாங்கள் உபயோகப்படுத்தியது மட்டுமல்லாமல், விஐபிக்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் சப்ளை செய்துள்ளனர். விற்பனையும் செய்துள்ளது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நடிகர் காந்த் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது ரத்தம், சிறுநீர் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சோதனையில், அவர் போதைப் பொருள் உட்கொண்டது தெரியவந்தது. குறிப்பாக கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களிலும் அவர் போதைப் பொருள் உபயோகித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், இந்த போதைப் பொருள் நெட் ஒர்க்கிற்கு தலைவனாக இருந்து செயல்பட்டது அதிமுக ஐடி விங்க் பிரமுகர் பிரசாத் என்று தெரியவந்துள்ளது. அவர் சாதாரண ஆள்தான். ஆனால் நடிகர் காந்த்தை வைத்து தீங்கிரை என்ற பெயரில் படம் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சம்பளம் ரூ.15 லட்சம் வரை கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பணத்தைக் கேட்க ஸ்ரீகாந்த் போனதுபோதுதான், கொக்கைனைக் கொடுத்து பழக்கியுள்ளனர். அதன்பின்னர் ரூ.15 லட்சத்திற்கு பதில் கொக்கைன் கொடுத்துள்ளனர். அவர் சில நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்துள்ளார். இதனால் காந்த்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால், பெரிய நடிகர், நடிகைகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மச்சான்ஸ் என்று பேசும் நடிகை, ஒல்லி நடிகை பார்ட்டியில் கலந்து கொண்டு கொக்கைன் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில் இந்தப் போதைப் பொருள் விற்பனைக்கு மூலகாரணமாக இருந்தது அதிமுக ஐடி விங்க் பிரமுகர் பிரசாத் என்று தெரியவந்துள்ளது. இவர் அதிமுக விஐபி ஒருவரின் மகனுக்கு நெருக்கமானவர். அவரது பணத்தைக் கொண்டுதான் தீங்கிரை என்ற படத்தை அவர் தயாரித்துள்ளார். மேலும் அதிமுக விஐபிக்கள், முன்னாள் அமைச்சர்களின் மகன்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
அவர்களுக்கு அடிக்கடி பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார். இதற்காக சினிமா நடிகைகளையும் பார்ட்டிக்கு அழைத்துள்ளார். அந்தப் பார்ட்டியில் கொக்கைன் விற்பனை செய்துள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்தப் போதை பழக்கத்துக்கு அடிமையான நடிகர், நடிகைகள், அதிமுக விஐபிக்கள், அவர்களின் மகன்கள் குறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பிரசாத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் இதற்காக மனு தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், நடிகர் கிருஷ்ணா போலீஸ் அனுப்பிய சம்மனை ஏற்று நேற்று நுங்கம்பாக்கம் போலீஸ்நிலையம் வந்தார். அவரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 10 மணி நேரத்துக்கும் மேல் இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. விசாரணையில், தான் கொக்கைன் பயன்படுத்தவில்லை. பிரதீப்குமாரை தெரியாது என்றார். ஆனால் காந்த்திடம் வாங்கினாரா என்பது குறித்து பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் கொக்கைன் பயபடுத்தியது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரிடம் நேற்று இரவு 10 மணிக்கும் மேல் விசாரணை நீடித்தது. இந்த விசாரணையைத் தொடர்ந்து மேலும் சில நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்தவும் ேபாலீசார் திட்டமிட்டுள்ளனர்.


