துபாய்: கேரள மாநிலம், வயநாட்டை சேர்ந்தவர் அபிஜித் ஜீஸ்(26), செங்கனூரை சேர்ந்தவர் அஜீஷ் நெல்சன்(29). மருத்துவ பணியாளர்களான இருவருக்கும் அபிதாபி மருத்துவமனையில் நர்சாக வேலை கிடைத்தது. இதையடுத்து இருவரும் கொச்சியில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது ஒரு பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையில் இருந்து சரிந்து விழுந்துள்ளார்.
அந்த விமானத்தில் பயணித்த அபிஜித் ஜீஸ், அஜீஷ் நெல்சன் இதை கவனித்தனர். அபிஜித்தும், நெல்சனும் சிபிஆர் என்னும் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானம் தரையிறங்கியதும் உடனடியாக அந்த பயணி ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அபுதாபி வந்தடைந்ததும் இரண்டு மருத்துவ பணியாளர்களும், இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று விட்டனர்.
விமானத்தில் பயணித்த பிரின்ட் ஆன்டோ என்பவர் இந்த தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதன் பின்தான் இது தெரியவந்தது. சக பயணியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.அவர்கள் வேலையில் சேர்ந்துள்ள நிறுவனமும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது என கல்ப் நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
 
 
 
   