Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

சென்னை: ஆடி மாதம் அம்மனுக்கு மட்டும் உகந்த மாதம் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உகந்த மாதம். கிருத்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது தான் எனினும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, ஆடி கிருத்திகை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் காலையிலே எழுந்து குளித்து தங்களது வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருவதால் அந்தந்த கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், காவல்துறை சார்பிலும் பக்தர்கள் வசதிக்காகவும், வழிபாட்டிற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல கோவில்களில் அன்னதானங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆடி கிருத்திகையையொட்டி அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் அடிவாரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து பேருந்து மூலம் பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதைபோல சென்னை, வடபழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். சிறப்பு அலங்காரத்தில் தமிழ் கடவுள் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே குடி தண்ணீர் வசதி, முதியோர், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.