நாட்டார்மங்கலத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை வேண்டி கரகம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!
பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க தேவையான அளவு மழை பெய்ய வேண்டி இன்று கரகம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க தேவையான அளவு மழை பெய்ய வேண்டி இன்று கரகம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாட்டார்மங்கலம் பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தபடி செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலின் மலை அடிவாரத்தில் உள்ள பஞ்சநதி தெப்பக்குளத்துக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் பக்தர்கள் குளத்தில் புனித நீராடி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனையில் கலந்து கொண்டனர்.
பின்னர், பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தவாறு நாட்டார்மங்கலம் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று செல்லியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.