ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகள் வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்த உதவாது: அடையாள அட்டைகளாகத்தான் கருதப்படும் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வாக்களர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 2003ஆம் ஆண்டுக்கு பின்னர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் தாங்கள் இந்தியர்தானா என்பதை உறுதி செய்ய தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும். வரும் 25ஆம் தேதி வரை இதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலை அருகில் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய பணியை திடீரென மேற்கொள்வதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க ஆதார், வாக்காளர் அடையாள அட்ைட, ரேஷன்கார்டுகளை ஆவணமாக பரிசீலிக்கும்படி கடந்த 17ஆம் தேதி நடந்த விசாரணையின் போது தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி இருந்தது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை, தகுதியற்ற நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் தேர்தலின் தூய்மையை அதிகரிக்கிறது. இது குடியுரிமை, வயது மற்றும் சாதாரண குடியிருப்பு தொடர்பான சில தகுதிகளைக் கொண்டுள்ளது. தகுதியற்ற நபருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.
எனவே தேர்தல் ஆணைய நடவடிக்கை பிரிவு 19 மற்றும் 21ஐ மீறுவதாகக் கூற முடியாது. சிறப்பு தீவிர திருத்தப்பணியில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகளை பரிசீலிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள், உண்மையில் அடையாளத்தின் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக ஆணையத்தால் ஏற்கனவே பரிசீலிக்கப்படுகின்றன. இவை வெறும் அடையாள அட்டைகள் தான்.
சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவத்தை வழங்கும் ஒரு நபரால் ஆதார் எண் தானாக முன்வந்து வழங்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது. தற்போதுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தகுதிச் சான்று உட்பட அனைத்து ஆவணங்களையும் அவர்கள் வசிக்கும் இடத்தில் வாக்குச் சாவடி நிலை அதிகாரியிடம் (பிஎல்ஓ) வழங்குவதற்கு ஒரே மாதிரியான வாய்ப்பு உள்ளது.
இதை பார்க்கும் போது எந்தவொரு வாக்காளரும் எந்த சிரமத்தையும் சந்திப்பதில்லை. இனம், சாதி, மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் எந்தவொரு நபரும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. எனவே, பிரிவு 14 ஐ மீறியதாகக் கூற முடியாது. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 28 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
* இதுவரை 52 லட்சம் பேர் அவுட்
பீகாரில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு தீவிர திருத்தப்பணி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜூலை 25ஆம் தேதி ஆவணங்கள் கொடுக்க கடைசி நாள் ஆகும். அந்த அடிப்படையில் பார்க்கும் போது இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் முகவரிகளில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 18 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும் கண்டறிந்துள்ளனர்.
மேலும் 26 லட்சம் வாக்காளர்கள் வெவ்வேறு தொகுதிகளுக்கு இடம் மாறிவிட்டனர். இரண்டு இடங்களில் மேலும் 7 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான 52.30 லட்சம் வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.