Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பேஸ்புக் விளம்பரம் மூலம் ஐடி கம்பெனி ஊழியரிடம் ரூ.9.70 லட்சம் அபேஸ்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சோழிங்கநல்லூர்: பேஸ்புக் விளம்பரம் மூலம், ஐடி கம்பெனி ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.9.70 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள பழைய சந்தைப்பேட்டை எர்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (41, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது பேஸ்புக்கில் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி ஒரு விளம்பரம் வந்துள்ளது.

அதில், அதிகம் சம்பாதிக்க குறிப்பிட்ட லிங்க்கை பயன்படுத்தி, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதை நம்பிய ராஜேஷ், பேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டு இருந்த லிங்க் மூலம் புதிய ஆன்லைன் வர்த்தக செயலியை நிறுவியுள்ளார். பிறகு அந்த இணையத்தில் குறைந்த அளவு முதலீடு செய்துள்ளார். அதற்கு கமிஷனாக ரூ.2,390 கிடைத்துள்ளது. உடனே ஒரு வார காலத்திற்குள் அடுத்தடுத்த பரிவர்த்தனைகளில் ரூ.9.70 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

அதன்பின், எதிர்முனையில் இருந்து எந்த கமிஷன் தொகையும் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, ரூ.9.70 லட்சம் ஆன்லைன் மோசடி என வழக்குப்பதிவு செய்தனர். தொடர் விசாரணையில், ஐடி ஊழியர் ராஜேஷ் செலுத்திய பணம், மகாராஷ்டிரா, டெல்லியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் வரவு வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். உடனே வங்கி மூலம் அந்த நிதி நிறுவனத்தில் வரவு வைக்கப்பட்ட ரூ.9.70 லட்சம் பணத்தையும் மோசடிக்காரர்கள் எடுக்க முடியாதபடி முடக்கி வைத்தனர்.

தற்போது அந்த பணத்தை மீட்டு ஐடி ஊழியர் ராஜேஷ் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டது வட மாநில கும்பல் என தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். செல்போன்களுக்கு வரும் தேவையில்லாத மெசேஜ், அழைப்புகளுக்கு பொதுமக்கள் பதிலளிக்க வேண்டாம். மீறி பதிலளித்து ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழக்காதீர்கள் என சைபர் கிரைம் போலீசார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.