Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையமானது பல்வேறு நகர்ப்புர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்கிட வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கிடும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் பின்வருமாறு நியமித்து ஆணையிட்டுள்ளது:-

(1) தலைவர் : கே. அலாவுதீன், (ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர்)

(2) அலுவல் சாரா உறுப்பினர் : என்.தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி

(3) உறுப்பினர் (அலுவல் வழி) : நகராட்சி நிர்வாக இயக்குநர்

(4) உறுப்பினர் (அலுவல் வழி) : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர்

(5) உறுப்பினர் (அலுவல் வழி) : பேரூராட்சிகளின் ஆணையர்

(6) உறுப்பினர்-செயலர் : பிரத்திக் தாயள், அரசு துணைச் செயலாளர் (வரவு-செலவு) (முழு கூடுதல் பொறுப்பு), நிதித்துறை.

இந்த ஆணையம், ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின், அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிதி நிலையை ஆய்வு செய்து, பிற இனங்களுடன் பின்வருபவை குறித்து பரிந்துரை செய்யும்:-

* மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயினை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல், அத்தகைய வருவாயில் மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றிற்குரிய பங்குகளை முறையே பிரித்தளித்தல்;

* ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய அல்லது அவைகளே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்தல்; மற்றும்

* மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி மானியங்கள்;

2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்கும் ஐந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில், இந்த ஆணையம், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தனது அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அளித்திடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.