சத்தியமங்கலம்: தாளவாடியில் தோட்டத்தில் 3 யானைகள் புகுந்ததால் 50 தென்னங்கன்றுகள் சேதமாகின. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் தாளவாடியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் நகர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாயி சிவநஞ்சா (64) என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து அந்த பயிரிடப்பட்டிருந்த 50 தென்னங்கன்றுகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
மேலும் விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை சேதப்படுத்தியதோடு நீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த சொட்டுநீர் பாசன குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தின. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாளவாடி மலைப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.