Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் தெலங்கானா வாலிபர்

ராமநாதபுரம்: சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, தெலங்கானாவைச் சேர்ந்த வாலிபர் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில் உள்ள கஜ்வெல் நகரைச் சேர்ந்த நாம்தேவ்-அஞ்சம்மாள் தம்பதி மகன் சிவகோடி (26). டிப்ளமோ பட்டதாரியான இவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ராமேஸ்வரம் செல்லும் வழியில், ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: பொழுது போக்கிற்காக எனது மாநிலத்தில் அவ்வப்போது சைக்கிள் பயணம் மேற்கொள்வேன். இதனிடையே, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நீர்சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் செல்ல திட்டமிட்டேன்.

இதன்படி, ஐதராபாத்தில் கடந்த மே 28ம் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். ஆந்திரா மாநிலம் நெல்லூர், திருப்பதி வழியாக வந்து தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு வந்தேன். அங்கிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி செல்கிறேன். பின்னர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்துக்கு செல்கிறேன். நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் செய்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இதற்கு ஓராண்டு ஆகலாம். இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க், கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் தங்கிக் கொள்கிறேன். ஓய்வு எடுக்கும் இடங்களில் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்வேன். இவ்வாறு எனது பயணம் தொடர்கிறது’ என்றார்.