Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 4 லட்சம் பேர் பயன்: அமைச்சர் தகவல்

சென்னை: ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48” திட்டத்தில், 4 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டில் உள்ள 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என்று 723 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட முதல் 48 மணி நேரத்தில் ரூ.1 லட்சம் அரசின் சார்பில் தந்து அவர்களுடைய உயிரை காப்பாற்றுவது என்கின்ற வகையிலான ஒரு மிகச் சிறந்த திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48. இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறது.

விபத்து நேர்ந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து, முதல் 48 மணி நேரத்தில் அவர்களுக்குரிய முதலுதவிகளை செய்து அரசின் சார்பில் ரூ.1 லட்சம் உதவியுடன் அவர்களது உயிரை காப்பதும். அந்தவகையில் இந்த திட்டம் ரூ.1 லட்சம் நிதியுதவியோடு 3 ஆண்டு காலம் சிறப்பாக வழங்கப்பட்டு வந்தது, அது கடந்த ஆண்டு ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த அரசு பொறுப்பேற்றபிறகு இதுவரை 3,99,999 என்கின்ற வகையில் ஏறத்தாழ 4 லட்சமாவது பயனாளி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் 4,00,001, 4,00,002, 4,00,003 என்கின்ற பயனாளிகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின்படி 101 சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பிறகு நேற்று முன் தினம் வரை 3,99,952 பேர் பயனடைந்து இருக்கிறார்கள். அதற்காக இந்த அரசு ஒட்டு மொத்தமாக செலவிட்டிருக்கும் தொகை ரூ.365.02 கோடி ஆகும். இந்த திட்டத்தின் சிறப்புகளை அறிந்த ஒன்றிய அரசு இதே போன்று ஒரு திட்டமான விபத்து நேர்ந்த 7 நாட்களுக்குள் ரூ.1.5 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இன்று இந்தியா முழுமைக்கும் ரூ.1.5 லட்சம் பெற்று பயன்பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 எனும் திட்டம் ஆகும். தமிழ்நாட்டில் விபத்து நேர்ந்திருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு அவர்களுக்கு உதவி செய்கிறோம். ஒன்றிய அரசு அறிவித்த திட்டத்தின்படி, காவல்துறை விசாரணை முடிந்து பிறகுதான் அவர்களுக்கு உதவித் தொகை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மதுரவாயல் எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினீத், ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு அலுவலர் தனவேல், முதல்வர் மரு.சீனிவாசாராஜ், இணை இயக்குநர் மரு.ரவிபாபு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.