Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் விரைவில் 49 பிஎஸ்என்எல் டவர்கள் 4ஜி சேவைக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது

*தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூரில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கப்படும் நிலையில், விரைவில் 49 டவர்கள் 4ஜி சேவைக்கு தரம் உயர்த்தப்பட உள்ளதாக ஊட்டியில் நடந்த தொலைத்தொடர்பு தொடர்பான நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டத்தில் தொிவிக்கப்பட்டது. இந்திய அரசு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மதுரை மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஊட்டியில் நடந்தது.

தமிழ்நாடு ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

இதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி பேசுகையில், ‘‘ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவன சேவைகளும், ஒவ்வொரு விதமான திட்டங்களை கொண்டுள்ளன. நுகர்வோர்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தேர்வு செய்யும் பொழுது அவர்களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைகளை தெரிவிப்பதற்கு தனியாக நுகர்வோர் உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை சரியில்லை என்றால் மொபைல் எண்களை வேறு நிறுவனத்திற்கு போர்ட் செய்து 6 மாதம் இடைவெளியில் மாற்றி கொள்ளாலாம். மாற்றி கொள்ள சரியான குறையை சுட்டி காட்ட வேண்டும்’’ என்றார்.

பிஎஸ்என்எல் நிறுவன துணை பொதுமேலாளர் மனோஜ் பேசுகையில், ‘‘பிஎஸ்என்எல் நிறுவனம் மிக பரந்த சேவையை வழங்கி வருகிறது. இதில் தரைவழி தொலைத்தொடர்பு தந்து அதன் பின் மொபைல் போனுக்கான சேவைகள் மற்றும் தற்போது பிராட்பாண்ட் இணைய சேவைகள் என பல்வகை சேவை வழங்கப்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் தற்போது நீலகிரி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட மொபைல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் 4ஜி சேவை வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் 3ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் மேலும் 49 டவர்கள் 4ஜி சேவையாக மாற்றப்பட உள்ளது.

இன்னும் தொடர்ந்து அனைத்தும் 5ஜி சேவைக்கு மாற்ற அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சேவை வழங்கப்படும். மொபைல் போன்கள் கதிர்வீச்சுகள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் என்பதால் பிஎஸ்என்எல் நிர்ணயிக்கப்பட்ட கதிர்வீச்சு அளவு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பிஎஸ்என்எல் சேவை தொடர்பான குறைகளை தெரிவிக்க 18003451500, 18001801503 ஆகிய எண்களில் புகார் பதிவு செய்யலாம். மொபைல் சிம் வாங்கும் போது அளிக்கும் தகவல்கள் குறித்த பாதுகாப்பு உறுதிபடுத்தி கொள்வதும் அவசியம்’’ என்றார். தொடர்ந்து பங்கேற்ற 120க்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.