புதுச்சேரி: தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிக்கு 470 வகையான உணவு பரிமாறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பொங்கலை மகர சங்கராந்தி என்ற பெயரில் அப்பகுதி மக்கள் கொண்டாடுகின்றனர். புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த ஸ்டீல் தொழிற்சாலை நடத்தி வரும் சத்யபாஸ்கர் வெங்கடேஸ்வர் என்பவரது மகள் மருத்துவர் ஹர்னியாவுக்கும், விஜயவாடா பகுதியை சேர்ந்த மென் பொறியாளர் சாகீத் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் மணமகன் சாகீத் முதல் சங்கராந்தி பொங்கலை மணமகள் ஹர்னியா வீட்டில் கொண்டாடுவதற்காக ஏனாம் வந்துள்ளார். அப்போது அவருக்கு 470 வகையான உணவுகளை விருந்தாக வைத்து பெண் வீட்டார் அசத்தினர். விருந்தில் மாப்பிளைக்கு பிடித்த உணவுகள், இனிப்பு வகைகள், சாப்பாடு என உள்ளூர் வகை உணவு தொடங்கி பல மாநில உணவுகளும் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.