பிறந்தநாள் கொண்டாட்டத்தை கண்டித்ததால் ஆத்திரம் முன்னாள் எல்ஐசி அதிகாரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 வாலிபர்கள் கைது
*அம்பையில் நள்ளிரவில் பரபரப்பு
அம்பை : அம்பையில் நள்ளிரவில் நடுத்தெருவில் வைத்து பிறந்தநாள் கொண்டாடியதை கண்டித்த முன்னாள் எல்ஐசி அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அம்பாசமுத்திரம் முடப்பாலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (65).
எல்ஐசியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வசிக்கும் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு சில வாலிபர்கள், கூட்டமாக சக நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி உள்ளனர்.
அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளோரின் வீடுகளுக்குள் பட்டாசு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சியில் தூக்கத்தில் இருந்து எழுந்தனர். மேலும் நடுத்தெருவில் நின்று நீண்ட நேரமாக கூச்சல் போட்டு இடையூறு செய்ததால் அவர்களை ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் அவர்களை சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத வாலிபர்கள், நள்ளிரவில் மீண்டும் அதே தெருவுக்கு வந்து தங்களை கண்டித்த ரவிச்சந்திரன் வீட்டின் மீது 4 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு பைக்கில் தப்பிச்சென்றனர். இதில் 2 குண்டுகள் வெடித்து சிதறின. மற்ற 2 குண்டுகள் வெடிக்காமல் அங்கு கிடந்தன. சத்தம் கேட்டு வெளியில் வந்த ரவிச்சந்திரன், இதுகுறித்து அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வெடிக்காமல் கிடந்த 2 குண்டுகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், எஸ்ஐ திருமலைக்குமார், ஆனந்த பாலசுப்பிரமணியன், கான்ஸ்டபிள் அப்பாத்துரை ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில், பெட்ரோல் குண்டுகளை வீசியது அதே பகுதி வடக்குத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் சுனில்ராஜ் (20), மகேஷ் மகன் முத்து (20), மேகலிங்கம் மகன் மூர்த்தி (24), தெற்குத் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் மகன் முகேஷ் (20) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
விசாரணையில் நண்பர் முத்துவின் பிறந்த நாளை கொண்டாடும் போது அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை தொந்தரவு செய்ததும், கண்டித்ததால் ரவிச்சந்திரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதும் தெரியவந்தது.
இதனால் போலீசார் முத்துவின் பிறந்த நாள் அன்றே அவரையும், அவரது நண்பர்களையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அம்பையில் நள்ளிரவில் மாஜி எல்ஐசி அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


