திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் அதிகளவு பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது தரிசனத்திற்கு பல மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் நேற்று 62,756 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,510 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.23 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.
நேற்று சுவாமியை தரிசிக்க 18 மணி நேரம் ஆன நிலையில் இன்று 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பாத கங்கம்மா கோயில் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலையில், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.