Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகால ஆட்சியில்; வணிகவரித்துறையில் ரூ.40,000 கோடிக்கு மேல் அதிக வருவாய்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் வணிகவரித் துறை மூலம் ரூ 40,399.51 கோடி அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, முந்தைய ஆட்சியில் (2020-21) ரூ.85,606.41 கோடியாக இருந்த மொத்த வரி வசூல் வருவாயானது நடப்பாண்டில் (2023-2024) 1,26,005.92 கோடி ரூபாயாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் வணிக வரித்துறையில் முதல்வர் தலைமையிலான செயல்திறன்மிக்க ஆட்சியில், வணிகவரி துறையின் வாயிலாக பல்வேறு சீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வரி விதிப்பில் எளிய நடைமுறை, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின்னாளுமை திட்டம், சமாதான திட்டம், வருவாய் வளர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், எனது விலைப்பட்டி எனது உரிமை, கட்டணமில்லா சேவை மையம், எளிய வணிகப்பிரிவு உருவாக்கம், வணிகர் நல வாரியத்தின் மூலம் எண்ணற்ற உதவிகள் உள்ளிட்ட நல்ல பல திட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளில் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் பயனாக, வணிகவரி துறையில் ஏறத்தாழ 47.19 சதவீதம் கூடுதலாக அதிக வருவாய் ஈட்டப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. வரி வசூல் சாதனை வரி நிர்வாகத்தில் பல்வேறு எளிய நடைமுறைகளும், மின்னாளுமை திட்டத்தின் வாயிலாக வலைத்தளங்களின் மூலமாக வரிகளை செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்தியதன் பயனாக, முந்தைய ஆட்சியில் (2020-21) ரூ.85,606.41 கோடியாக இருந்த மொத்த வரி வசூல் வருவாயானது நடப்பாண்டில் (2023-2024) 1,26,005.92 கோடி ரூபாயாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40,399.51 கோடி அதிகமாக ஈட்டப்பட்டு 47.19 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

சமாதான திட்டம்

முதல்வரின் வழிகாட்டுதலின்படி முந்தைய சட்டங்களின் வரி நிலுவைகளை வசூலிக்கும் பொருட்டு, வணிகர்கள் பயனடையும் வகையில் சமாதான திட்டம் 2023ம் ஆண்டு தமிழ்நாடு வரிகள் (நிலுவைகளை தீர்வு செய்தல்) சட்டம் (சட்ட எண் 24/2023) இயற்றப்பட்டு 16.10.23 முதல் 31.03.24 வரை நடைமுறையில் இருந்தது. இத்திட்டத்தின் கீழ், ரூ.50,000 வரை நிலுவை தொகை உள்ள 1,15,805 இனங்களில் மொத்த கேட்பு தொகையான ரூ.142.56 கோடியை தள்ளுபடி செய்து ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ரூ.50,000க்கு மேல் நிலுவை தொகை இருந்த இனங்களில், ரூ.247.89 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய சமாதான திட்டங்களுடன் ஒப்பிடும் போது இதுவரை வசூலானதில் அதிகபட்ச தொகையாகும். ரூ.62 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.39.29 கோடியில் 12 வணிக வரி புதிய கட்டிடங்கள், ரூ. 19 கோடியில் வணிகவரித் துறையின் சுற்றும் படை அலுவலர்களுக்கு 100 புதிய வாகனங்கள், ரூ.3.06 கோடியில் சுற்றும் படை அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், உரிய அறிவுரைகளை வழங்கிடவும், புதிய மாநில மைய கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் துறையின் நுண்ணறிவு பிரிவு ஆய்வு குழுக்கள் ரூ.1095.93 கோடி வருவாயும், சுற்றும் படைகள் மூலமாக ரூ.217.68 கோடி வருவாயும் ஈட்டப்பட்டுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்ட 7 புதிய நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதிக வரி செலுத்துவோர் பிரிவு உட்பட நிர்வாக கோட்டங்களின் எண்ணிக்கை 12-லிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்ட 6 புதிய நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம் நுண்ணறிவு கோட்டங்களின் எண்ணிக்கை 9-லிருந்து 15-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கு இணையாக குறைந்தபட்சம் ஒரு வணிகவரி மாவட்டத்தை கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக துறையின் கள அலுவலகங்கள் மறுசீரமைக்கப்பட்டு, 13 புதிய வணிகவரி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், வணிகவரி மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 42லிருந்து 55ஆக உயர்ந்துள்ளது. வணிகவரித் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட வரி ஆய்வு குழு பரிந்துரை/பகுப்பாய்வு அடிப்படையில் முதல் கட்டமாக மார்ச் 2024ல் தமிழ்நாடு அரசுக்கு ரூ.510.09 கோடி கூடுதல் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு கிடைத்துள்ளது.

வணிகர் நல வாரியம்

தமிழ்நாடு வணிகவரி துறையின் வரலாற்றில் முதன்முறையாக 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட வணிகர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1 லட்சம் ரூபாயாக இருந்த குடும்ப நல உதவி ரூபாய் 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் இதயம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரமும், செயற்கை சிறுநீர் பிரிப்பு, கதிர்வீச்சு அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.25 ஆயிரமும், கருப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தலா 10 ஆயிரமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5 ஆயிரமும் வழங்கப்படுவதோடு, 10ம் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது. முதல்வரின் அறிவுரைக்கிணங்க, விபத்துக்கால உதவித் தொகையாக ரூ.25 ஆயிரமும், திருமண உதவித் தொகையாக தலா 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 8,880 உறுப்பினர்களுக்கு ரூ.3.2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு வணிகர் நலன் பேணப்பட்டுள்ளது. மேலும், வணிகர் நல வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினருக்கான பதிவுக்கட்டணம் ரூ.500 செலுத்துவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டதன் பயனாக, 40,994 உறுப்பினர்கள் இந்த வாரியத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எளிய வணிகப் பிரிவு

அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையிலும், வணிகம் செய்வதை எளிதாக்கிடும் வகையிலும் வணிகவரித்துறையில் முதன்முறையாக கடந்த ஜூலை 2023 முதல் ‘எளிய வணிகப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தனி தணிக்கை பிரிவு, கூடுதல் ஆணையர் (கணினிகள்) மற்றும் கூடுதல் ஆணையர் (வரி ஆய்வு) ஆகிய இரண்டு புதிய பணியிடங்கள், 1000 உதவியாளர் பணியிடங்கள் தரம் உயர்த்தி 840 துணை வணிகவரி அலுவலர் பணியிடங்களாகவும், 160 வணிகவரி அலுவலர் பணியிடங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் துறையின் பல்வேறு நிலைகளில் உத்தரவிடப்பட்டு, 7 கூடுதல் ஆணையர்கள், 23 இணை ஆணையர்கள், 76 துணை ஆணையர்கள், 96 உதவி ஆணையர்கள், 296 மாநில வரி அலுவலர்கள் மற்றும் 975 துணை மாநில வரி அலுவலர்கள் ஆகியோர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை குறைப்பு

சாமானிய மக்கள் பயன்படும் வகையில், தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு 15 சதவீதம் + ரூ.13.02 என்று இருந்த வரியை 13 சதவீதம் + ரூ.11.52 ஆக குறைக்கப்பட்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையுடனும் தமிழ்நாடு எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றிட முனைப்புடனும், அர்ப்பணிப்புடனும் ஆற்றி வரும் பணி அளவிடற்கரியது. அந்த வகையில், வணிக வரித்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் இனிவரும் காலங்களில் அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாயினை உறுதி செய்யும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.